ஞாயிறு, 16 டிசம்பர், 2012

"கண்கெட்ட பின்னே சூரிய உதயம் "!

"கண்கெட்ட பின்னே சூரிய உதயம் " பழமொழி தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு மிகப்பொருத்தமாக உள்ளது . பள்ளி குழந்தைகள் பலியான பின்பு அரசு விழித்துக்கொண்டு பல சட்டங்கள் போட்டது .இன்னும் கூட பள்ளிக் குழந்தைகள் விலங்குகளைப்போல் ஆட்டோவிலும் வேனிலும் திணிக்கப்பட்டு பயணம் செய்கின்றன . அடுத்த சம்பவம் நடந்தப் பிறகே அரசு கண்துடைப்பு சட்டம் போடும் ! இன்று பேருந்து படிக்கட்டுப் பயணத்தில் பலியான மாணவர்கள் குறித்து நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து அரசு மீண்டும் தன் கண்துடைப்பு நாடகங்களை அரகேற்றி வருகிறது .படியில் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை பாய்கிறது . என்னக்கொடுமை பாருங்கள் ,படியில் தொங்குவதற்க்கு காரணமே உட்கார இடமில்லாத காரணத்தால்தான் . வேண்டுமென்றே படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கைப் பாய்வதில் தவறு இல்லை .ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக படியில் தொங்குவோர் மீது நடவடிக்கை எடுப்பது என்றால் அரசு தன் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! ஏராளமான share ஆட்டோக்கள் ஓடியும் பேருந்து நிரம்புகிறது என்றால், ஒன்று share ஆட்டோவில் பயணம் செய்ய வசதி இல்லாதோரும் இலவச பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் மட்டுமே பேருந்தில் பயணம் செய்யும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் . போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற செயல்கள்தான் அப்பாவி மாணவர்களின் பலிக்கு காரணம் .தண்டிக்கப்படவேண்டியவர்கள் அவர்கள்தான் . ஒரு வாகனத்தில் அதிக சுமை ஏற்றினால் தண்டிக்கும் காவல்துறை என்றாவது அதிக பயணிகளை ஏற்றிவரும் பேருந்து மீது நடவடிக்கை எடுத்துள்ளதா ? அல்லது எடுக்கும் தைரியம்தான் உள்ளதா ? சென்னையின் மக்கள் தொகைக்கும் அதன் பரப்பளவிற்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா ? மக்கள் வசிப்பதற்கு இடமே இல்லாத போது அவர்கள் பயணம் செய்யும் பேருந்தில் இடம் இருக்குமா ? குற்றவாளி யார் ? படிக்கட்டில் தொங்குபவனா ? மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தொலைநோக்கு திட்டங்களை தீட்டாத அரசியல் வியாதிகளா ? சைரன் ஒலியுடன் ஹோண்டா சிட்டியில் பயணம் செய்யும் அந்த ஒன்றுக்கும் உதவாத அதிகாரியை பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ய வைத்து கொன்று இருக்க வேண்டாமா ? பேருந்தை இடித்தது ஆந்திர லாரியாம்! அந்த காலை நேரத்தில் லாரியை லஞ்சம் வாங்கிக்கொண்டு உள்ளே அனுமதித்த போக்குவரத்து காவலர் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, அப்பாவிமாணவர்களை தண்டிப்பது நியாயமா ? படிக்கட்டில் பயணம் செய்ய முடியாத கதவுப் பேருந்துகள் தற்போது உள்ளன .ஏன் அரசு அனைதுப்பேருந்துகளுக்கும் கதவு போடவேண்டியது தானே ? சென்னையில் இருக்கும் அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்தா நிற்கிறது ? share ஆட்டோதானே நிற்கிறது !இந்த செயலுக்கு, பேருந்து ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் தரப்படும் ஷேர் எவ்வளவு ? பேருந்துகளை நிறுத்திவிட்டு பேசாமல் அரசு ஷேர் ஆடடோ கழகம் தொடங்கலாமே ? திட்டமிடல் இல்லாத அரசு ,ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகி கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதை விட்டுவிட்டு மக்கள் தொகைக்கு ஏற்ப தன் தொலைநோக்கு திட்டங்களை தீட்ட வேண்டும் .உடனடியாக தமிழக மாவட்ட தலைநகரங்களை சென்னைபோல் உயர்த்த திட்டமிட வேண்டும் .சென்னையில் குவிந்திருக்கும் அரசு மற்றும் தனியார் அதிகார மையங்கள் தமிழகம் எங்கும் பரவலாகப்படவேண்டும் .அணைத்து மாவட்டங்களும் சரிசமமாக உயரும் பட்சத்தில் மற்ற மாவட்டத்தினர் ஏன் சென்னையில் குவியப்போகிறார்கள் ? கல்வி ,மருத்துவம் ,வேலைவாய்ப்பு ,இம்மூன்றுக்காக மட்டுமே அனைவரும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர் .இனி புதிய மருத்துவமனையா ?பள்ளியா ?வர்த்தக நிறுவனமா ? சென்னைக்கு இல்லை .வெளி மாவட்டங்களுக்குதான் என்று அரசு என்று முடிவு எடுக்கிறதோ அன்றுதான் சென்னைக்கு விமோசனம் ! இல்லையேல் சென்னை ஐ .டி சிட்டியாக மாறாது ..மும்பை தாராவியாக தான் மாறும் ! எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் போக்குவரத்து நெரிசலையோ ,விபத்துக்களையோ தடுக்க முடியாது . ஜால்ரா அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அறிவார்ந்த அதிகாரிகளுக்கு பதவி தரவேண்டும் .இல்லை என்றால் முதல்வரின் 2023 தொலைநோக்கு திட்டம் 2073 ஆம் ஆண்டிலும் நிறைவேற வாய்ப்பில்லை ! படிக்கட்டிலே தொங்கியே பரலோகம் போகவேண்டியதுதான் !