ஞாயிறு, 18 மே, 2014

நான் தமிழ்த் தாய் பேசுகிறேன் ......!

இறந்தவர்களுக்கு மட்டுமே சிலை ...
இது தமிழ் மரபு

இன்னும் நான்
உயிரோடு இருக்கிறேன் !

என்னுடன் பிறந்த மொழிகள் எல்லாம்
மறைந்த நிலையில்

என் பத்துக் கோடி பிள்ளைகள்
என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

என் மூத்த மகன் வள்ளுவனுக்கு
சிலை வைத்த போது மகிழ்ந்தேன்

என் இளைய மகன் பிரபாகரன்
ஆண்டபோது சிலிர்த்தேன்

எனக்கான நாட்டைக் கேட்ட
ஒரே குற்றத்திற்காக

லட்சக்கணக்கான என் பிள்ளைகளை
கொன்றபோது தமிழகம் வேடிக்கைப் பார்த்தது

நான் பார்வதி அம்மாளாய்
உயிர் பிச்சைகேட்டுவந்தபோது
விரட்டி அடிக்கப்பட்டேன்

நாடு இழந்து என் ஈழத்துப் பிள்ளைகள்
நாதி அற்றுத் தவிக்கிறார்கள்

சரி ,என் தாய் நாட்டிலாவது
நிம்மதி இருக்கிறதா ?

எனக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக
என் பிள்ளைகளுக்கு தண்ணீர் இல்லை

பாராண்ட என் இனம்
பஞ்சத்தில் தவிக்கிறது

பயிர் செய்ய நிலமில்லை
படுத்துறங்க இடம் இல்லை

அரசுப் பள்ளிகளில் மட்டுமே வாழ்ந்த நான்
அங்கிருந்தும் நேற்று துரத்தப்பட்டேன்

அகதியாய் அனாதையாய் உலகெங்கும்
உழலும் என் குழந்தைகள்

ஆனந்தமாய் அமைதியாய் வாழட்டும்
அதுவே எனக்கு மகிழ்ச்சி

குற்றுயிரும் குலை உயிருமாய் இருக்கும்
எனக்கு முதலில் தேவை முதலுதவி

கல்விச்சாலைகளிலும் கணினியிலும்
என்னை அமரவைத்து அழகு பார்

என்னை கற்றவனுக்கே முதல் பதவி
என்னை சுமப்பவனுக்கே முதல் மரியாதை

என் உழவன் மகனுக்கே இங்கு உயிர் இல்லாத போது
உயிரோடு இருக்கும் எனக்கு சிலை எதற்கு ?

என் மகள்களின் தாலிகள் எல்லாம் சாராயக்கடையில்
என் மகன்களின் உடல்கள் எல்லாம் சாக்கடையில்

என் பிள்ளை அன்று கங்கை கண்டான் கடாரம் கொண்டான்
அய்யகோ ....இன்று எப்போதும் போதை கொண்டான்

அந்தப் பணத்திலா எனக்கு சிலை ?
அதற்கு பதில் என்னை செய்து விடு ..கொலை !!

எனக்குப் பிறகு பிறந்த சீன மொழி உலகை ஆளுகிறாள்
ஜப்பான் ,கொரியா ,ஜெர்மனி ,இந்தி ஆட்டம் போடுகிறாள்

ஆனால் ..அனைவருக்கும் மூத்தவள்
அனாதையாய் அழுகிறேன்

என்னை சிரிக்க வைக்க இங்கு யாரும் இல்லை
சிலையாக்க மட்டும் துடிப்பதேன் ?

"கல்லுக்கும் மண்ணுக்கும் முன் தோன்றியவள் "
கைதட்டல் பெற பொய் சொன்னவர்கள் ...
என்னை நிஜக் கல்லாகவே மாற்றப்போவது
நியாயம்தானா ?

இத்தனைக்கும் பிறகும் என்னை
சிலையாக்கத் துடிப்பவர்களுக்கு
ஓர் வேண்டுகோள் ....

என்னை மதுரையில் நிற்கவைக்க வேண்டாம்
முள்ளிவாய்க்காலில் புதைத்து விடுங்கள் ...
விதைகளோடு விருட்சமாய் வருவேன் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக