வியாழன், 12 ஜூன், 2014

அறிவுமதி ..சுபவீ தொடர்ந்து ...இன்று இயக்குனர் மணிவண்ணன்...

இனமான இயக்குனர் அண்ணன் மணிவண்ணன் நம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டு உருண்டோடி விட்டது .அவரது முதலாண்டு நினைவுக் கூட்டம் அவரது நூல் வெளியீட்டுடன் கோவையில் வரும் 15 ஆம் நாள் நடைபெற உள்ளது .அண்ணனைப் பற்றிய என் நினைவுகளை பகிர்கிறேன் ..

அப்போது நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவர் .
"உன்ன நினச்சேன் பாட்டு
படிச்சேன் 'படத்தின் தயாரிப்பாளர் நண்பர் ஜி .டி .ரமேஷ் அலுவலகம் நந்தனத்தில் இருந்தது .விளம்பரம் விஷியமாக அவரை அடிக்கடி சந்திப்பேன் , அவரது நிர்வாகி ஆர்த்சாமி என் நண்பர் ,எனக்கு பல தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்தியவர் .ரமேஷ் அப்போது சரத்குமாரை வைத்து
" மூன்றாவது கண்" படத்தையும் தயாரித்துக்கொண்டு
இருந்தார் .படத்தின் இயக்குனர் மணிவண்ணன் .ரமேஷ் காரில் இருந்த தாகம் இதழை படப்பிடிப்பில் மணிவண்ணன் பார்க்க உடனடியாக என்னை பார்க்க விரும்பி ரமேஷ் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பினார் .சில நாட்கள் கழித்தே தயிரிப்பாளர் ரமேஷும் ,ஆர்த்சாமியும் எனக்கு இதை தெரிவித்தனர் .

வழக்கமாக படத்தின் விளம்பரத்திற்காக இயக்குனர் மற்றும் தயிரிப்பாளர்கள் வாசலில் நான் தவமிருப்பது வழக்கம் .முதல் முறையாக இயக்குனர் மணிவண்ணன் என்னை அழைத்தது ஆனந்த அதிர்சியைந்தந்தது.என் இரு சக்கர வாகனம் தியாகராயர் நகரில் நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் எதிரில் உள்ள சரவணன் தெருவில் பறந்தது .அங்குதான் இயக்குனர் மணிவண்ணனை முதல் முறையாக சந்தித்தேன் .

"அமைதிப்படை" படத்தின் ஆரம்ப வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது .என்னை மணிவண்ணன் அமரச்செய்து ..."மாணவர்கள் எல்லாம் சேர்ந்து பத்திரிகை நடத்துவதாக ரமேஷ் சொன்னார் .ரொம்ப மகழ்ச்சியா இருந்தது .அதான் உங்களை பார்க்க உடனே வர சொன்னேன்" என்றார் .ஒரு பக்கம் என்னிடம் பேசிக்கொண்டே மறுப்பக்கம் அமைதிப்படை வேலைகளையும் கவனித்துக்கொண்டு
இருந்தார் ."வெள்ளித்தட்டு வாங்கியாச்சா?இளையராஜாவுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்" என்று அவர் உதவியாளரிடம் கட்டளை இட்டுக்கொண்டு இருந்தார். "சொல்லுங்க தம்பி தாகத்திற்கு நான் என்ன செய்யணும் .அமைதிப்படை விளம்பரம் ஒன்னு போட்டிடுங்க" என்று அவர் சொல்ல , அட என்னடா இவர் கேட்காமலேயா விளம்பரம் தருகிறாரே என்று ஆச்சர்யம் அடைந்தேன் ..நாட்டு நடப்பு அரசியல் நக்கல் என்று தொடந்து விவாதித்துக்கொண்டு இருந்தார் .

"நேற்று ஒரு அரசு அலுவலகம் வாசலில் பார்த்தேன் ...small water irrigation system கீழே சிறு நீர் பாசன திட்டம் என்று மொழிப்பெயர்த்து உள்ளார்கள் முட்டாள்கள் .சிறிய நீர் பாசனத் திட்டம் என்று தானே வரவேண்டும் .மொழிப்பெயர்ப்பே சரியாக செய்யத் தெரியாதவன் எப்படி நம் மொழியை வாழவைப்பான் .நம்ம கவிப்பேரரசு கிட்ட சொன்னா அவர் மொழிபெயர்க்கப் போறாரு" என்றார் நக்கலாக .ஆச்சர்யத்துடன் அந்த மனிதரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன் .

தாகம் வளர்ச்சி நிதிக்காக கங்கை அமரன் இசை நிகழ்ச்சி நடத்துகிறோம் நீங்கள் நிச்சியம் வரவேண்டும் என்றேன் ."நிதி முழுக்க கங்கை அமரனுக்கே குடுத்துருவீங்க போல ...50000 மா ரேட் பேசுவீங்க" என்று வருந்தினார். என் படத்த டிகெட்ல போடுவதை விட "அமைதிப் படை " நாயகிகள் கஸ்தூரி, ரஞ்சிதா படத்த போடுங்க. நல்லா டிக்கெட் விற்கும் " என்றார் சிரிப்புடன். என் எதிரிலேயே அவர்களுக்கு தொலைபேசி செய்து கட்டளை இட்டார் ."இது நான் நடத்துற நிகழ்ச்சி நீங்கள் இருவரும் செல்லவேண்டும் .நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் வெளியே வரணும்" என்று.

சொன்னது போலவே 1993 மே 23 மாலை தாகம் நிகழ்ச்சிக்கு சென்னை மியூசிக் அகாடெமிக்கு ரஞ்சிதா வந்தார் .இரவு 9 மணி ஆகியும் நிகழ்ச்சி முடியவில்லை .மேடையில் அமர்ந்துக்கொண்டு என்னை பரிதாபமாக பார்த்தார் ரஞ்சிதா .10 மணிக்கு கிளம்பினார் ."நான் கடைசி வரை இருந்தேன் என்று மணிவண்ணன் சார் கிட்ட சொல்லுங்க "என்றார் ! அமைதிப்படை மாபெரும் வெற்றிக்கு பிறகு மணிவண்ணன் பரப்பான நடிகராக மாறினார் .அவர் உச்சாணி கொம்பை தொட்டாலும் தாகத்திற்கு உதவுவதை நிறுத்தவே இல்லை .

இயக்குனர் வி .சேகர் அவர்களின் படம் .கதாநாயகி குஷ்பூ .மணிவண்ணன் முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் .இடம் ஏ .வி .எம் ஸ்டுடியோ.உள்ளே சென்ற என்னை அன்புடன் அவர் அருகே அமர்த்திக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார் .உரிமையுடன் என் பாக்கெட்டில் கை விட்டு பணமிருக்கிறதா என்று பார்தார்.உடனே தன் உதவியாளரை அழைத்து தாகம் இதழுக்கான அச்சக செலவை வழங்கினார் !

அப்போதுதான் குஷ்பூவுக்கும் சுந்தருக்கும் காதல் பரபரத்த நேரம் .குஷ்பூ நீண்ட நேரம் கைப்பேசியில் பேசுவதை பார்க்க்கொண்டே இருந்தவர் ..."இந்தம்மா லவ் பண்றதுக்கு என் போன்தான் கிடைச்சுதா ?" என்று புலம்பிக்கொண்டு இருந்தார் ..மற்றொரு புறம் திரும்பி பார்த்தார். வயதான பெண் ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தார் .என்னை சோகமாக பார்த்துக் கொண்டே... .. "அந்தம்மா யார் தெரியுதா? ..அவர் குஷ்பூவோட அம்மா ...அவர் பேசுறதும் என் போன்லதான் .இதுக்குன்னே பம்பாய்ல இருந்து கிளம்பி வந்துடுவாங்களா ?"என்று அவர் நக்கல் அடிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .மணிவண்ணனின் புலம்பலில் ஒரு நியாயம் இருந்தது ..காரணம் 20 ஆண்டுகளுக்கு முன் கைப்பேசி கட்டணம் ஒரு நிமிடதிர்க்கே 10 ரூபாய் !
இப்படி அவருடனான அனுபவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்

அவர் தமிழ் சினிமா உலகிலேயே மெத்தப்படித்த இயக்குனர். காரல் மார்க்சில் இருந்து தற்கால இலக்கியம் வரை படித்தவர், படித்துக் கொண்டே இருந்தவர். சினிமா மூலம் மக்கள் பிரச்னைகளை சொல்வது அதற்கு வெளியேயும் மக்களுக்காக களமாடுவது என்று பல சினிமா இயக்குனர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது வேர்பாசம் கொண்டிருந்த இயக்குனர் மணிவண்ணன் ம.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது வைகோ முன்னிலையிலேயே நமது தாகம் இதழின் ஏழாம் ஆண்டு விழா சென்னை ஜெர்மன் அரங்கத்தில் நடைபெற்றது .அதில் பேசிய அவர் ...
.
‘‘ம.தி.மு.க. ஏனைய திராவிடக் கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி வைக்கக் கூடாது. தமிழ் தேசிய அமைப்புகளோடு தனித்து நின்று களம் காணவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஓர் தமிழ் தேசிய அரசு அமைக்க முடியும். அப்படி ம.தி.மு.க. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரில் ஒருவரோடு கூட்டணி வைத்தாலும் நான் விலகிவிடுவேன்’ என்று எச்சரித்தார்.
ஆனால்... அதற்கு சில மாதங்களிலேயே வைகோ ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார். சொன்ன சொல் மாறாமல் கட்சியில் இருந்து விலகினார் மணிவண்ணன். அன்றில் இருந்து தமிழ் தேசிய அமைப்புகளுக்கு உதவி செய்வதிதையே தன் அரசியல் பணியாக மேற்கொண்டார்.
சமீபத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி செயல்வடிவம் பெற்றது, அதன் கொள்கை முழக்கங்கள் வரையறுக்கப் பெற்றதும் மணிவண்ணன் வீட்டில்தான்.

‘நான் செத்தால் என் உடல் மீது புலிக் கொடிதான் போர்த்தவேண்டும்’ என்று அன்றே சொன்னபடி மணிவண்ணன் மீது புலி கொடி போர்த்தப்பட்டுவிட்டது மிக சோகமயமான காட்சி..

தமிழ் தேசிய அரசை தமிழகத்தில் அமைப்பதே இனமான இயக்குனருக்கு நாம் செலுத்தும் இதயபூர்வமான அஞ்சலி. ஒரு தமிழன் புலிக் கொடி போர்த்தி உறங்குகிறான்... அவன் உறங்கட்டும். அவன் கொள்கைகள் உறங்காதிருக்கட்டும்!

எங்கள் இனமான இயக்குனருக்கு தாகத்தின் செம்மாந்த வீரவணக்கம்.

-தணியாத தாகம் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக