ஞாயிறு, 18 மே, 2014

நான் டிராக்டர் பேசுகிறேன் .....!
-தாகம் செங்குட்டுவன்

பச்சைப் பசேல் வயல்களை உருவாகக் பாடுபட்டேன் அன்று
பதின் அடுக்கு மாடிகளை எழுப்ப உதவுகின்றேன் இன்று

களைப் பறித்த பெண்களின் கண்ணாடி வளையோசை கேட்டது அன்று
களைத்த முகத்தோடும் கலைந்த கூந்தலோடும் சித்தாளாய் பார்க்கிறேன் இன்று

மாடுகளின் சுமைகளை பகிர்ந்துகொள்ள படைத்தார்கள் என்னை
மாடுகள், பிளாஸ்டிக் பைகளை உண்ணச் சொல்கிறது சென்னை

விவசாயிகளின் நண்பனாய் இருந்தேன் என்பதே எனக்கான அடையாளம்
விசுவாசம் இல்லாத முதலாளிகளின் கையில் இங்கு எனது கடிவாளம்

கழனியெல்லாம் சுற்றிவருவேன் பின்தொடரும் கலப்பை
நகரெங்கும் பவனி வருகிறேன் காணவில்லை களிப்பை

மூட்டை மூட்டையாய் சுமப்பேன் நெல் மணிகளை
வீடு வீடாய் சுமந்து செல்கிறேன் குடி தண்ணீரை

குயில் பாட்டும் கும்மிப்பாட்டும் என்னை சுற்றி ரீங்காரமிடும்
குத்துப்பாட்டும் குமட்டல் இசையும் இங்கு எங்கும் ஓலமிடும்

கூழும் கஞ்சியும் என் மீது தெறிக்கும் சாப்பாட்டு வேளையில்
குவாட்டரும் பீரும் நாற்றம் அடிக்கிறது தினமும் மாலைவேளையில்

பத்து ரூபாய்க்கு அன்று என் வயிற்றை நிரப்பும் டீசல்
வெறும் பத்து லிட்டரில் இன்று என் உயிர்..... ஊசல !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக